நுபுர் சர்மா பேச்சு நாட்டையே தீக்கரையாக்கிவிட்டது - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
நுபுர் சர்மாவின் பேச்சு நாட்டையே தீக்கரையாக்கிவிட்டது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முகமது நபி குறித்து இழிவு கருத்து
இஸ்லாமியர்களின் இறை துாதரான முகமது நபி குறித்து அண்மையில் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இழிவான வகையில் பேசியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே பல்வேறு அரபு நாடுகளும் தங்களது கண்டனத்தை இந்தியாவிற்கு தெரிவித்தது.
இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன.
முகமது நபி குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் நுபுர் சர்மா மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
நுபுர் சர்மாவிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
இந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கரையாக்கிவிட்டார்.
நுபுர் சர்மாவிற்கு எதிராக பதிவான புகார்கள் மீது டெல்லி காவல்துறையினர் என்ன செய்கிறது. அவர் நடந்து கொண்ட விதம், அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்ககேடானது.
உதய்பூரில் டெய்லர் படுகொலை செய்யப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால் தான். நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினர்.
மேலும் ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசி விடமுடியாது. நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு என தெரிவித்தனர்.
நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம் தாழ்த்திய செயல்,நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.
நுபுர் சர்மா மனு நிராகரிப்பு
நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா?
அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? இதுஜனநாயக நாடுதான், இங்கே பேச்சுரிமையும் இருக்கு, புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு, அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது.
தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுவதாக தெரிவித்து உத்தரவிட்டனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இனி நாடு முழுவதும் தடை!