‘’காவல்துறையினர் என் குடும்பத்தினரை துன்புறுத்துகின்றனர்’’ - ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு
தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதியன்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
மேலும் ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, தனிப்படை பெங்களூரு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. மேலும் கூடுதலாக 2 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
சினிமா பட பாணியில் கார் விட்டு கார் மாறி மாறி பயணம் செய்து வருவதாக கூறப்பட்டது.தற்போது 8 தனிப்படைகள் மூலமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், “ சிறப்பு அமர்வு அமைத்து தனது முன் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காவல் துறையினர் தனது குடும்பத்தினரை துன்புறுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.