யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் - அலட்சியத்தின் அபாயம்!
தலைமை மருத்துவமனையில் தொடர் மின்தடையால் யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை மருத்துவமனை
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் தாலுகா அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டு
அமைச்சர்கள் பங்கேற்ற விழாவும் நடந்தது. ஆனால், இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்ற நோயாளிகள் அங்கிருந்து கும்பகோணம் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
யுபிஎஸ்
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை இருளில் மூழ்கிக் கிடந்தது. இருள் சூழ்ந்துள்ள மருத்துவமனைக்கு அழகேசன் சீமாட்டி தம்பதியினர் பிரசவத்திற்காக வந்தனர்.
மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்தனர். பிரசவ அறையில் யுபிஎஸ் வெளிச்சத்தில் சீமாட்டிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
பிரசவம்
அதே நேரத்தில் காலில் வெட்டுப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர்கள் இல்லாமல் கும்பகோணம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல் தாலுக்கா மருத்துவமனையை நம்பி இரவு நேரங்களில் வருகின்ற பல்வேறு நோயாளிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
அலட்சியம்
தலைமை மருத்துவமனை என பெயரளவில் இருந்தாலும் போதிய வசதிகள் இல்லாததால் உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் பணியில் இருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மின்தடை ஏற்படும் நேரங்களில் ஜெனரேட்டர் இயங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருக்கலைப்பு:அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டங்கள்-இந்தியால என்ன சட்டம்?