கேப்டனின் செல்வாக்கை மிஞ்சுவாரா ராதிகா..? விருதுநகரில் கேப்டன் மகனுக்கு கடும் சவால்..!
விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
கேப்டன் ஊர்
மறைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது.
அவர் தற்போது மறைந்துள்ள நிலையில், வரும் மக்களவை தேர்தலில் அனுதாப வாக்குகள் விஜய்காந்த்தின் கட்சி பக்கம் வர வாய்ப்புகள் உள்ளது.
அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளும் வகையாக விருதுநகரில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கேப்டனின் மகன் விஜயபிரபாகர். அவருக்கு கேப்டனின் பிம்பம் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
பாஜக ராதிகா
இது ஒரு புறம் இருக்க, இந்த தொகுதியில் தற்போது வேட்பளராக களமிறங்கியுள்ளார் ராதிகா சரத்குமார். ராதிகாவிற்கு என அரசியல் பலம் இல்லை என்ற போதிலும், திருநெல்வேலி - விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது.
அதே போல, தான் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கணிசமான செல்வாக்கை கொண்டுள்ள ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன், அமமுக டிடிவி தினகரன், ஓபிஎஸ் என பலரும் பாஜக பக்கமே உள்ளனர்.
இதனை வாக்குகளாக மாற்ற பாஜக பெரும் முயற்சியை மேற்கொள்ளும். இதன் காரணமாக, விருதுநகர் தொகுதியில் பெரும் சவாலை இரு வேட்பாளர்களும் சந்திப்பார்கள். கேப்டனின் செல்வாக்கா..? அல்லது பாஜகவின் செல்வாக்கு ராதிகாவை வெற்றி பெற வைக்குமா..? என்ற கடும் போட்டி எழுந்துள்ளது.
காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
இதில் நாம், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரை மறந்து விட முடியாது. மாணிக்கம் தாகூர் அந்த தொகுதியில் இது வரை 2 முறை வெற்றிபெற்றுள்ளார். கடந்த முறை அவர் தேமுதிக வேட்பாளர் அழகர் சாமியை வெற்றி கொண்டார்.
2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட விருதுநகர் தொகுதியில் 3 தேர்தலில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவரே களமிறங்குவார் என நம்பப்படுகிறது. அவ்வாறே நடந்தால், இது மும்முனை போட்டியாக மாறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
2 முறை வெற்றி கொண்ட மாணிக்கம் தாக்குர், கேப்டன் அனுதாபம் - அதிமுக பலத்துடன் களமிறங்கும் விஜய பிரபாகர், பாஜகவின் கூட்டணி சக்திகளுடன் போட்டிக்கு வந்துள்ள ராதிகா சரத்குமார் களமிறங்கும் நிலையில், விருதுநகர் பெரும் போட்டியை சந்திக்கிறது.