முதலமைச்சரிடம் போனில் நன்றி கூறி கதறி அழுத தான்யாவின் தாய்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவுக்கு மருத்துமனையில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் போனில் பேசிய அவரது தாய் நன்றி கூறி கதறி அழுதார்.
சிறுமிக்கு முகச் சிதைவு நோய்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டிபன் ராஜ் சௌபாக்கியா தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். இவருக்கு முகச் சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமி பல்வேறு மருத்துமனைக்களுக்கு அழைத்துச் சென்று பெற்றோர் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சைகள் பலன் அளிக்காமல் சிறுமி தானியாவின் வலது கண், கன்னம், தாடை, உதடு என்று ஒரு பக்கம் முழுவதுமாக சிதைய தொடங்கியுள்ளது.
இது குறித்து செய்திகள் வெளியாகவே மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவர்கள் சிறுமி தானியாவுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
முதலமைச்சருக்கு ரொம்ப ரொம்ப நன்றி
பின்னர் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உத்தரவிட்டார். இதையடுத்து சவீதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. இதன் பின்னர் சிறுமியின் தாயிடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது சிறுமியின் தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களின் பேசிய சிறுமியின் தாய் சௌபாக்கியா, நீங்க பயப்படாதீங்க தானியா நல்லபடியாக வந்துவிட்டாள்.
தானியாவை பார்க்க நான் கண்டிப்பா வருவேன் என்று முதலமைச்சர் கூறியதாகவும், தனக்கு இது கனவு மாதிரி இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கடவுள்
முதலமைச்சர் என்னுடைய குழந்தையை சரி பண்ணியிருக்கிறார் ரொம்ப ரொம்ப நன்றி சிஎம் சார். எவ்வளவு முறை முதலமைச்சருக்கு நன்றி சொன்னாலும் பத்தாது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிறுமியின் தந்தை ஸ்டிபன் ராஜ் பேசும் போது நான் எத்தனையோ கடவுனை வேண்டி இருக்கிறேன் ஆனால் எந்த கடவுளும் எதுவும் செய்யவில்லை.
எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கடவுள் என்று தெரிவித்தார்.
மேலும் சிறுமி தான்யாவின் பெற்றோர் அமைச்சர் நாசர் கடந்த 6 நாட்களாகவே சிறுமியை தினமும் வந்து பார்த்து சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து தனது குழந்தைக்கு ஆறுதல் தெரிவித்து வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.