சும்மா இருப்பதே வேலை - ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சம்பாதிக்கும் நபர்
சும்மா இருப்பதன் மூலம் ஒரு நபர் ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
சும்மா இருக்கும் தொழில்
கற்க கசடற என்ற படத்தில் வடிவேலு "சும்மா இருப்பது என ஈசியா? ஒரு மணி நேரம் சும்மா இருக்க முடியுமா என ஒரு நபருக்கு சவால் விடுப்பார். ஆனால் ஒரு மணி நேரம் சும்மா இருக்க முடியாமல் அந்த நபர் பந்தயத்தில் தோற்று விடுவார்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு நபர் சும்மா இருப்பதையே தொழிலாக கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
ரூ.69 லட்சம் வருமானம்
ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ என்ற 41 வயதான நபர், கடந்த 2018ம் ஆண்டு தனது வேலையை இழந்தார். அதன் பிறகு வேலை கிடைக்காத நிலையில், சும்மா இருப்பதை சேவையாக வழங்கி அதன் மூலம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.
கோவிட் ஊரடங்கு முன்னர் நன்றாக சென்று கொண்டிருந்த இவரது தொழில், ஊரடங்கு காலத்தில் முடங்கியுள்ளது. தற்போது அவரை வாடகைக்கு அமர்த்த ஆண்டுக்கு 1000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. 2-3 மணி நேரத்திற்கு $ 65 முதல் $ 195 வரை ( இந்திய மதிப்பில் ரூ.5,000 முதல் ரூ.17,000) வரை கட்டணம் வசூலித்து வருகிறார். இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும் $80,000 (இந்திய மதிப்பில் ரூ.69 லட்சம்) சம்பாதித்துள்ளார்.
இவரை வாடகைக்கு எடுப்பவர்கள் இவரிடம் ஏதாவது பேசினால் ம்ம், ஓஹோ என சில வார்த்தைகளில் பதிலளிப்பார். அல்லது அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பார். வேறு எதுவும் செய்ய தேவையில்லை. பெரும்பாலும் காபி அருந்த போவதற்கு உடன் அழைத்து செல்வார்கள். அல்லது சில நிகழ்வுகளுக்கு உடன் அழைத்து செல்வார்கள்.
தனிமை
ஒரு முறை விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடம் விவாகரத்து தொடர்பான ஆவணங்களை வழங்க செல்லும் போது உடன் வருமாறு இவரை வாடகைக்கு அழைத்துள்ளார். அப்போது சோபாவின் ஓரத்தில் சும்மா அமர்ந்திருக்க வேண்டும் அது தான் அவரது வேலை.
தன்னை வாடகைக்கு எடுக்கும் போதே எதற்காக வாடகைக்கு எடுக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் கேட்டுவிட்டு அதை மட்டுமே செய்வார். ஆனால் இசை நிகழ்ச்சிக்கு செல்வது மற்றும் பாலியல் உறவு இந்த இரு விஷயங்களுக்கு மட்டும் மறுத்து விடுவாராம்.
ஜப்பானில் தனிமை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதால் பலரும் இவரை போட்டி போட்டுகொண்டு முன்பதிவு செய்து வருகிறார்கள். ஜப்பானில் காதலர்களை வாடகைக்கு எடுப்பது போன்ற சேவைகளும் அதிகரித்துள்ளது.