ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான் - சர்வதேச ஆண்கள் தினம் இன்று!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆண்கள் தினம்
ஆண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் சமுதாய பங்களிப்பை நினைவுகூறும் வகையிலும் இந்த சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் ஆண்களின் கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்க மற்றும் கொண்டாடவும் இந்நாளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆண்கள் தினத்தின் கருத்துரு “நேர்மறையான ஆண் முன்மாதிரிகள்” (Positive Male Role Models) ஆகும்.
பாலின சமத்துவம்
இந்த சமூகம் ஆண்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது அவசியம். ஆண், பெண் இருவரும் சமம் என்றாலும், பொதுவாக இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது? பெண்கள் என்றால் அழகு, ஆண்கள் என்றால் சம்பாத்தியம். இதுதான் இந்த பொதுச்சமூகம் சொல்வது. ஒரு ஆண் சம்பாதிக்காமல் இருந்து விட்டால் அவனை ஆணாகவே பார்க்க மறுக்கிறது.
ஆண்கள் என்பவர்கள் இயந்திரம் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே. சமூகம், குடும்ப பங்களிப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் இவற்றில் பங்களிக்கும் ஆண்களை கொண்டாட வேண்டும்.
ஆண்களுக்கு எதிரான பாகுபாட்டை சரி செய்ய வேண்டும். சமூக சேவைகள், சமூக அணுகுமுறைகள், எதிர்ப்பார்ப்புகள் மற்றும் சட்டங்கள் வழியாக சரிசெய்ய வேண்டும். ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும். பாலின உறவுகளை மேம்படுத்தவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் வேண்டும்.
ஆண்கள் பாதுகாப்பாக இருக்கவும் மற்றும் அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழும் ஆண் தொழிலாளிகளையும் கெளரவிக்க மறக்கக் கூடாது.
ஆண்களுக்கு எதிராகவும் இங்கு நிறைய பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை பெரும்பான்மையாக வெளியில் தெரிவதில்லை. எங்கு அதை வெளிப்படுத்தினால், தான் வலிமையற்றவனாகத் தெரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் ஆண்கள் பலர் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள். ஆண்களின் புகார்களும் இங்கு பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பல எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இந்த சமூகம் வைக்கும் எல்லா எதிர்பார்ப்புகளையும், எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால், அவர்கள் சமாளிக்க முயல்வார்கள். இந்த தினத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆபிஸ் அலுவலகங்களில் கொண்டாடலாம்.
அவர்களை பாராட்டும் வகையில் கடிதங்கள் மற்றும் அட்டைகளில் உங்கள் பாராட்டுகளை எழுதி அவர்களுக்கு பரிசளிக்கலாம். குறிப்பாக, உங்கள் வாழ்க்கையில் நல்விதமாக பங்களித்த ஆண்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான்..! அவர்களின் பங்கு மிகப்பெரியது.
பாலின சமத்துவம் என்பது ஆண்களின் நலனையும் உள்ளடக்கியதே என்பதை உணர முன்வருவோம். இந்த சர்வதேச ஆண்கள் தினத்தில் நம் வீட்டில் மற்றும் நம் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு ஆண்களுக்கும் நம் பாராட்டையும் நன்றியையும் தெரிவிப்போம்.
Happy International Men's Day 2024