சாப்பாட்டில் அதிகமான உப்பு..எதிர்த்துப் பேசுகிறாயா? மருமகளை சுட்டுக்கொன்ற மாமனார்!
சாப்பாட்டில் உப்பு அதிகமாக போட்டிருந்ததால் ஆத்திரத்தில் மருமகளை சுட்டுக் கொன்ற பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.80 வயது முதியவரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சாப்பாட்டில் உப்பு அதிகம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ. இப்பகுதியில் வசித்து வரும் முதியவர் கபூர்.
80 வயதான இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி மருமகளுடன் வசித்து வந்திருக்கிறார். குடும்பத்தினர் மீது சிறு சிறு விஷயங்களுக்கு கூட அதிகமாக கோபப்பட்டு வந்திருக்கிறார்.
எரிச்சல் அடைந்த மருமகள்
அப்படித்தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருந்திருக்கிறது . இதனால் ஆத்திரமடைந்து மருமகளிடம் சொல்லி சத்தம் போட்டிருக்கிறார்.
தொடர்ந்து மாமனார் கபூர் இப்படியே செய்ததால் எரிச்சல் அடைந்த மருமகள், அவரை எதிர்த்து பேசியிருக்கிறார். மாமனார் என்னிடமே எதிர்த்துப் பேசுகிறாயா? என்று ஆத்திரம் அடைந்த அவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மருமகளை நோக்கி சுட்டிருக்கிறார்.
துப்பாக்கி சூடு
இதில் குண்டடிபட்ட மருமகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். பின்னர் கபூர் மகன் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது ,
திடீரென்று திருடர்கள் புகுந்து விட்டார்கள். நான் அவர்களை சுட முயற்சித்தேன். அது தவறுதலாக மருமகள் மீது குண்டுகள் பாய்ந்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்.
அதிர்ச்சி
அவர் சொன்னதை நம்பாத போலீசார் அவரைத் தொடர்ந்து விசாரித்து வந்தனர். திருடர்கள் எந்த வழியாக வந்தார்கள் என்று கேட்டபோது பின் வாசல் பக்கமாக நுழைந்ததாக சொல்லியிருக்கிறார்.
ஆனால் அது உள்பக்கம் பூட்டி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது சந்தேகம் வந்ததால், அவரிடம் மேற்கொண்டு துருவித்துருவி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சாப்பாட்டில் உப்பு அதிகமாகி விட்டது என்பதற்காக மருமகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள மாமனாரின் செயல் லக்னோவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கண்ணாடி பாட்டில்களில் 7 சிசுக்களின் சடலங்கள் - பெரும் அவமானம்!