உத்தரப்பிரதேசத்தில் பரவும் மர்ம காய்ச்சல் - ஒரேநாளில் 12 குழந்தைகள் பலி
உத்தரப்பிரதேசத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா பரவ தொடங்கியது முதலே மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. தற்போது 2வது அலையும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக மர்ம காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சல் நீரிழப்பு, பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றிற்கு வழி வகுக்கிறது.
மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சோகமும் ஏற்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குறிப்பாக ஃபிரோசாபாத் மாவட்டத்தில் இந்த பாதிப்பு மிக மிக மோசமாக உள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் இந்த மர்ம காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். இதுவரை உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட 68 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.