இண்டியா கூட்டணி ஆட்சியமைக்கும்; பிரதமராகும் அமித் ஷா..? அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்க மோடி முடிவெடுத்துள்ளார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கெஜ்ரிவால் "இண்டியா கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ளேன்.
4 முக்கிய தலைப்புகளின் கீழ் பேசவுள்ளேன். முதலாவது, இந்த தேர்தலில் அமித் ஷாவுக்காக மோடி வாக்கு சேகரிப்பது. இரண்டாவது யோகி ஆதித்யநாத் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மூன்றாவது, அரசியல் அமைப்பை பாஜக மாற்றி எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிப்பது.
அமித் ஷா
நான்காவது, ஜூன் 4-ஆம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வருவது. அடுத்தாண்டு செப்டம்பர் 17-ம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும். அதன்பிறகு அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்க மோடி முடிவெடுத்துள்ளார். 75 வயதுடன் ஓய்வு பெற மாட்டேன் என்று இதுவரை பிரதமர் சொல்லவில்லை.
பிரதமர் மோடி உருவாக்கிய இந்த விதியை அவரும் பின்பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த முறை பாஜக ஆட்சி அமைக்கப் போவதில்லை. இண்டியா கூட்டணியே ஆட்சி அமைக்கப் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.