திகார் சிறையில் கெஜ்ரிவால்; 4½ கிலோ வரை குறைந்த எடை - குமுறும் ஆம் ஆத்மி அமைச்சர்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ வரை எடை குறைந்துள்ளதகா ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
அரவிந்த கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரின் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், அரவிந்த கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மேற்கொண்டு அவரை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரவில்லை. இதனால் வரும் 14 -ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள திகார் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார்.
அமைச்சர் காட்டம்
இந்நிலையில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. உடல்நலக் குறைவு இருந்தபோதிலும், 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைத்து வந்தார். கைதுசெய்யப்பட்டதிலிருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் 4.5 கிலோ வரை எடை குறைந்துள்ளார்.
இது மிகவும் கவலை அளிக்கிறது. இன்று அவரை சிறையில் அடைத்து, அவரது உடல்நிலையை பா.ஜ.க ஆபத்தில் ஆழ்த்துகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால், நாடு மட்டுமல்ல, கடவுள்கூட உங்களை மன்னிக்க மாட்டார்" என தெரிவித்துள்ளார்.