தேர்தலில் வெல்வார் என 30 கோடி பந்தயம் - தோல்வியால் கட்சி தொண்டர் விபரீத முடிவு!
கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதை வைத்து அங்கு மிகப் பெரியளவில் சூதாட்டம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள துர்புடிகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான இவர், அக்கட்சி வெற்றி பெரும் என பந்தயம் கட்டி சூதாட்டம் ஆடியுள்ளார். கிட்டத்தட்ட 30 கோடி அளவில் பந்தயம் கட்டியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது இருந்தே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் பின்னடைவையே எதிர்கொண்டு இருந்தது. இதனால் வேணுகோபால ரெட்டி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனேயே தனது கிராமத்தில் இருந்து மாயமானார். தேர்தல் முடிவுகளில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத அளவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.
வேணுகோபால ரெட்டி
இதனால் மிகப் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டு வேணுகோபால ரெட்டி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தனது கட்சி வெல்லும் என பலரிடமும் இருந்து கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டதால், தேர்தல் முடிவுகள் பாதகமாக வந்ததையடுத்துமாயமானார்.
அவரிடம் பந்தயம் கட்டிய பலர் வேணுகோபாலின் செல்போன் எண்ணுக்கு அழைத்துப்பார்த்தும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி வேணுகோபால ரெட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பிரிட்ஜ், சோபா, ஏசி, டிவி, பைக் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
விபரீத முடிவு
மறுநாள் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய அவர், தன் வீடு கடன் கொடுத்தவர்களால் நாசம் செய்யப்பட்டதை அறிந்த வேணுகோபால ரெட்டி வேதனை அடைந்துள்ளார். அதே நேரத்தில், வாங்கிய கடனை திரும்பக் கட்ட சொல்லி மேலும் சிலர் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதனால் என்ன செய்வதென புரியாமல் இருந்த வேணுகோபால ரெட்டி பூச்சி மருந்தைச் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேணுகோபால ரெட்டியை போலவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் சூதாட்டத்தில் பந்தயம் கட்டி பெருந்தொகையை இழந்தாக சொல்லப்படுகிறது.