YSR காங்கிரஸ் ஆதிக்கத்தை முடிக்குமா TDP - JS - BJP கூட்டணி!! ஆந்திர தேர்தல் நிலவரம்
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
ஆந்திர அரசியல்
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் வரும் மே 13-ஆம் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மொத்தமாக 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளையும் கொண்டுள்ளது.
தற்போது அம்மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. 2019-ஆம் ஆண்டு தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றிய அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
அதே போல, 22 மக்களவை தொகுதிகளையும் அக்கட்சி வென்று பெரும் ஆதிக்கத்தை கடந்த தேர்தலில் செலுத்தியது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி 23 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே வென்றது. பவன் கல்யாணின் ஜன சேனா 1 இடம் மட்டுமே பெற்றது. மக்களவை தேர்தலில் 3 இடங்களை தெலுங்கு தேசம் கட்சி வென்றிருந்து.
இளம் முதலமைச்சராக பதிவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அமைச்சர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் கடும் நெருக்கடியை அக்கட்சிக்கு கொடுத்துள்ளது. எதிர்முனையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி வாக்குகளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகளில், மக்களவை தேர்தலில் NDA கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் என கனிந்துள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலில் இழுபறியே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 25 மக்களவை தொகுதி, 175 சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. NDA கூட்டணியில் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜன சேனா 2 இடத்திலும் போட்டியிடுகின்றன.
அதே போல 175 சட்டமன்ற தொகுதிகளில் 144 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும், 21 இடங்களில் ஜன சேனா கட்சியும், 10 இடத்தில் பாஜகவும் போட்டியிடுகின்றன.