தொடருமா பாஜகவின் 20 ஆண்டு ஆதிக்கம்?? கர்நாடகா மக்களவை தேர்தல் ஒரு பார்வை
நாட்டின் 18-வது மக்களவியை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக அரசியல் குறித்து காணலாம்.
கர்நாடகா மக்களவை
மொத்தமாக கர்நாடகாவில் 28 தொகுதிகள். அதில், 14 தொகுதிகளுக்கு வரும் 26-ஆம் தேதியும், மற்ற 14 தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதியும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பாஜக - தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியும், காங்கிரஸ் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன.
மக்களவை தேர்தலில் 2004 ஆம் ஆண்டு முதல் இம்மாநிலத்தில் பாஜகவின் கையே ஓங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டு தேர்தலில் 18 இடங்களையும், 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 19 இடங்களையும், 2014 தேர்தலில் 17 இடங்களையும், 2019 ஆண்டு தேர்தலில் 25 இடங்களையும் பாஜக வென்று பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
ஆனால், இறுதியாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், அதே உத்வேகத்தை மக்களவை தேர்தலிலும் தொடர முனைப்பு காட்டி வருகின்றது. சட்டமன்ற தேர்தலின் போது அக்கட்சி கொடுத்த 5 வாக்குறுதிகளை மையப்படுத்தி காங்கிரஸ் பரப்புரை செய்கிறது.
ஆனால், அக்கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்கும் வகையில் தண்ணீர் தட்டுப்பாடு, வெடிகுண்டு சம்பவம் போன்றவற்றை கையில் எடுத்துள்ள பாஜக, 10 ஆண்டு ஆட்சி திட்டங்களையும் சுட்டிக்காட்டி பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றது. இம்முறை கூட்டணியில் பாஜக 25 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் தனித்தே 28 இடங்களிலும் போட்டியிடுகிறது. நட்சத்திர வேட்பாளர்களாக பாஜக தரப்பில் முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை ஹவேலி தொகுதியிலும், ஜெகதீஷ் ஷட்டர் பெல்காம் தொகுதியிலும், தேஜஸ்வி சூர்யா தெற்கு பெங்களூரு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.\
அதே போல, காங்கிரஸ் தரப்பில் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் ஷிமோகா தொகுதியிலும், மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு ரூரல் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.