சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை
கேரளா மாநிலத்தில் வரும் 26-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
கேரளா அரசியல்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவும் தமிழ்நாட்டை போலவே மதச்சார்பின்மையை உயரமாக பிடிக்கிறது. தென்னிந்தியாவில் பாஜக வலுவாக கால் பதிக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்ளும் மாநிலங்களில் ஒன்றாகவும் கேரளா இருக்கின்றது. மொத்தமாக கேரளாவில் 20 மக்களவை தொகுதிகள்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களை பெற்றது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2, கேரளா காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்தையும் வென்றிருந்தது. கடந்த தேர்தலில் பாஜகவால் ஒரு இடத்தை கூட அங்கு வெல்ல முடியவில்லை.
இம்முறை அந்த தோல்வியை சரி செய்து கொள்ள பாஜக பெரும் முயற்சிகளை கையாண்டு வருகின்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரத தர்ம ஜன சேனா என்ற கட்சி அங்கம் வகிக்கிறது.
அதே போல இடது ஜனநாயக முன்னணி(LDF - Left Democratic Front) கூட்டணியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ்(மணி) போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF - United Democratic Front) கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் போன்ற கட்சிகள் உள்ளன. நடைபெறும் தேர்தலில் மத்தியில் இந்தியா கூட்டணியில் இருக்கும் UDF - LDF மாநிலத்தில் தனித்து போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்து தான் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகினார். இம்முறை அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதால், காங்கிரஸ் கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.
10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியின் மோசமான நிதி பகிர்வு, மத அரசியல், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை முன்வைத்தே UDF - LDF கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன.
அதே நேரத்தில், மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், முதல்வர்கள் மீது குற்றச்சாட்டை வைத்தும், தி கேரளா ஸ்டோரி போன்ற பெண்கள் விவகாரங்களையும் முன்வைத்துள்ளது பாஜக. 10 ஆண்டு ஆட்சியில் மாநிலத்திற்கு வழங்கப்பட திட்டங்களையும் அக்கட்சி பட்டியலிட்டு வருகின்றது.