அண்ணாமலை தோல்வி: மொட்டை அடித்தவருக்கு இப்படி ஒரு சோதனையா? வனத்துறை விசாரணை!
பாஜக தொண்டரின் வீடு தேடி சென்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
அண்ணாமலை தோல்வி
2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் 1,17,561 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அண்ணாமலை கோவை தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவர் தோற்க மாட்டார் என்று உறுதியாக நம்பிய பாஜக தொண்டர்கள் பலரும், உள்ளூரில் உள்ள எதிர்க்கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்டு இருந்தனர்.
வனத்துறை விசாரணை
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் பனங்குறிச்சியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெயக்குமார், "கோவையில் அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன்" என பந்தயம் கட்டியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலை தோல்வி அடைந்த தகவலை கேட்ட அவர், நடுரோட்டில் மொட்டை அடித்து மீசையை மழித்துக் கொண்டார்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஜெயக்குமார் தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியில் புலி நகம் போன்ற டாலர் அணிந்து இருந்தார். இதனால் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை தேடி சென்று விசாரண நடத்தினர்.
அதில், அது புலி நகம் இல்லை என்றும், 10 வருடங்களுக்கு முன்பாக திருச்செந்தூர் கோவிலில் தெருவோர வியாபாரிகளிடம் வாங்கிய பொருள் என்பதும் தெரிய வந்துள்ளது.