40 அடி உயரம் - கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞருக்கு நடந்த கோர விபத்து!
சென்னை விமான நிலையத்தில், தொழிலாளி ஒருவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அரசு கட்டிடங்கள் , நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட இடங்களில் வண்ண விளக்குகள் அமைப்பது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணிகளில் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று சென்னை சர்வதேச விமான முனையத்தின் இரண்டாவது தளத்தின் மேல் பகுதியில் வண்ண விளக்குகளைத் தொங்கவிடும் பணியில் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த செல்வம்(26) என்ற கூலித் தொழிலாளி ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
40 அடி உயரம்
அப்போது, எதிர்பாராத விதமாகச் செல்வம் திடீரென தவறி சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து, படுகாயம் அடைந்துள்ளார். இதனை கண்ட சக ஊழியர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.