சூட்கேஸில் பெண்ணின் சடலம் - கள்ளக்காதலிக்கு ஸ்கெட்ச் போட்ட இளைஞர் - கொடூரம்!
இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் கொலை
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில், சூட்கேஸ் ஒன்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், அதனை வாங்கியவர் திருவாரூர் மாவட்டம் பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (32) என்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், நட்ராஜூக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியும் (33) வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும் திருமணமாகி கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக தெரிகிறது. மேலும், சுபலட்சுமிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நட்ராஜ் - சுபலட்சுமி ஆகியோர் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இருவர் கைது
இதனையடுத்து கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். பின்னர் கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி, இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.
கோவையில் கணவன்-மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், இருவருக்கும் இடையே கடந்த மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நட்ராஜ் ஒரு கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தனது நண்பர் கனிவளவன் என்பவரின் உதவியுடன் கடந்த 1-ம் தேதி ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் சுபலட்சுமியின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் நட்ராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்த போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.