சவால் விட்ட கட்சி.. ராஜிநாமா அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி - அரசியலில் சேர்கிறாரா?
தனது நீதிபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபடப்போவதாக அபிஜித் கங்கோபாத்யாய அறிவித்துள்ளார்.
அபிஜித் கங்கோபாத்யாய
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக பணியில் சேர்ந்தவர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய. பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில் தனது நீதிபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபடப்போவதாக அபிஜித் கங்கோபாத்யாய அறிவித்துள்ளார். நாளை தனது கடைசி பணி நாளாக இருக்கும் என அபிஜித் கங்கோபாத்யாய அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் ஈடுபடுவேன்
மேலும், தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் நாளை மறுநாள் அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனனை தேர்தலில் போட்டியிடத் தயாரா என்று திரிணாமுல் காங்கிரஸ் பலமுறை சவாலுக்கு அழைத்துள்ளனர்.
இதனால் நான் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது என நினைத்ததாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய தெரிவித்துள்ளார். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.