தமிழ்நாட்டில் கோபிமஞ்சூரியனுக்கு தடை?அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் கோபி மஞ்சூரியன் தடை குறித்த கேள்விக்கு மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
கோபிமஞ்சூரியன் தடை
கர்நாடகாவில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ‘ரோடமைன் பி’ கலந்து தயாரிப்பதால் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, தமிழகத்திலும் ஏற்கெனவே பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி இருந்ததால், அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோபி மஞ்சூரியன் வகைகள், சிக்கன் வகைகள், பிரியாணி, சிவப்பு மிளகாய் உள்ளிட்டவற்றிலும் புற்று நோய் உண்டாக்கும் வேதிப்பொருள் கலப்பதாக தமிழக உணவு பாதுகாப்பு துறை உறுதி செய்தது. இதனால் தமிழகத்திலும், கோபிமஞ்சூரியன் போன்ற உணவுகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
அமைச்சர் விளக்கம்
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை உள்ளது. ஆனால், கர்நாடகாவில் அவற்றுக்கு தடை இல்லை. இங்கு பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளார்கள் என்பதற்காக, தமிழகத்தில் தடை செய்ய முடியாது. கோபி மஞ்சூரியனுக்கு தடைவிதிப்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரைப் படியே நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா பயிரிடப்பட வில்லை இவ்வாறு குறிப்பிட்டுருந்தார்.