ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் - ஒரே நாளில் முடிவை மாற்ற காரணம் என்ன?
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேநீர் விருந்து
நாடு முழுவதும் இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரை ஆற்றினர்.
வழக்கமாக சுதந்திர தினத்தன்று மாலை, பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார். அதன்படி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
திமுக புறக்கணிப்பு
ஆளுநர் மாநில நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்த நிலையில் திமுகவும் புறக்கணிப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர் என அறிவிக்கப்பட்டது. மேலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் விருந்தில் பங்கேற்க உள்ளனர்.
முதல்வர் பங்கேற்பு
இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அறிவித்துள்ளார். அரசியல் கருத்துக்கள் என்பது வேறு அரசின் நிலைப்பாடு என்பது வேறு.
ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு உள்ளது. கருத்தியல் மாறுபாடு உள்ளதால் கட்சி ரீதியாக இந்த விருந்தில் திமுக பங்கேற்கவில்லை. ஆளுநர் பொறுப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அவர் கொடுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநர் விருந்தை புறக்கணித்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பாகவும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது