78 வது சுதந்திர தின விழா - கோட்டையில் கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் உரை
78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து விட்டு உரையாற்றினார்.
78-வது சுதந்திர தினம்
இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
தமிழக அரசு சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின்
சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட பின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அந்த உரையில், "வெளிநாடுகளின் உதவியையும் பெற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை நடத்தியபோது, அவருடன் கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள். விடுதலை அடைய கால நிர்ணயம் இல்லை எனத் தெரிந்தும், உயிரையும் இழந்தவர்கள் வாழ்ந்த மண் இந்த தமிழ் மண்.
அறவழியில் எதிரியை பணியவைத்த காந்தியடிகள் பின்னால் முழு மனதுடன் இந்தியா அணி வகுந்தது. அதில் தமிழ்நாடு முழுமையாக கைகோர்த்து நின்றது. சத்தியப் பாதையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், அதற்காக அணிவகுத்து நின்றவர்கள் தமிழ்நாட்டின் தியாகிகள். இவர்களின் தியாகத்தால்தான் விடுதலை காற்றை சுவைத்தோம்.
கலைஞர்
மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலில் 1974-ம் ஆண்டு பெற்று தந்தவர் நமது முன்னாள் முதல்வர் கலைஞர். இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம் தான். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.
தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பேசினார்.
விருது
இதன் பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதையும், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேலுக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருதையும், நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருதுகள் பிரிவில் சிறந்த மருத்துவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஜா.விஜயலட்சுமிக்கும், சமூகநலத்துக்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருது பிரிவில் மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது சென்னையை சேர்ந்த மீனா சுப்ரமணியனுக்கும், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டது.