என் மகனுக்கு அந்த இந்திய வீரரைத் தான் முன்மாதிரியாக கூறுவேன் - பிரையன் லாரா புகழாரம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான 'பிரையன் லாரா' விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார்.
விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் தனது சிறப்பான பேட்டிங்கால் பல சாதனைகளை அவர் முறியடித்தார்.
குறிப்பாக தனது 50வது சதத்தை விளாசி, ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். மேலும், விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதையும் விராட் கோலி வென்றார்.
அவர் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான 'பிரையன் லாரா' விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார்.
பிரையன் லாரா
அவர் பேசியதாவது "எனக்கு ஒரு மகன் இருக்கிறான், தன் மகன் ஏதேனும் விளையாட்டை தேர்ந்தெடுத்தால் கோலியைத்தான் முன்னுதாரணமாக காட்டுவேன். அவரின் அர்ப்பணிப்பையும், நேர்மையையும் பின்பற்றும்படி கூறுவேன்.
தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடி எப்படி நம்பர் ஒன் வீரராக உருவாக வேண்டும் என்று கூறுவேன். விராட் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய உண்மையான மரபுதான். கிரிக்கெட்டை விளையாடும் விதத்தையும் அதன் முகத்தையும் அவர் மாற்றி இருக்கிறார்” என்று பிரையன் லாரா பேசியுள்ளார்.