விராட் கோலி ஹோட்டலில் தமிழருக்கு அனுமதி மறுப்பு; பிரபலம் வேதனை - எதற்காக தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் 'விராட் கோலிக்கு' சொந்தமான ஹோட்டலுக்கு வேட்டி, சட்டையில் சென்ற மதுரை பிரபலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் தனது சிறப்பான பேட்டிங்கால் பல சாதனைகளை அவர் முறியடித்தார்.
குறிப்பாக தனது 50வது சதத்தை விளாசி, ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். மேலும், விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதையும் விராட் கோலி வென்றார். அவர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஹோட்டல் பிஸினஸையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்தவர் ராப் பாடகர் ராம். இவர் ராவண ராம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர். அண்மையில் ராம், விராட் கோலிக்கு சொந்தமான மும்பையில் உள்ள 'ஒன் 8' என்ற உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக வேட்டி சட்டையில் சென்றுள்ளார்.
அனுமதி மறுப்பு
அப்போது அங்குள்ள ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. வேட்டி சட்டையில் உள்ளே செல்ல அனுமதியில்லை என அவரை ஊழியர்கள் வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அந்த உணவகம் முன் நின்று தனக்கு நடந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் "இப்படி நடந்தது மனதுக்கு கஷ்டமாகி விட்டது. விராட் கோலியின் பெயருக்காக இங்கு வருகின்றனர். நான் புதிய வேட்டி அணிந்து தான் ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் டிரஸ்கோட் சரியில்லை என ஊழியர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என தெரியவில்லை.
நான் தமிழ் கலாச்சார உடையுடன் வந்துள்ளேன். அதோடு அதிக பசியோடு வந்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. வருத்தத்தோடு அறைக்குச் செல்கிறேன்'' என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் மற்றும் அதிருப்தியை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.