விபத்தில் சிக்கிய விராட் கோலி..? முகத்தில் காயங்களுடன் புகைப்படம் - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
விராட் கோலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விராட் கோலி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில், இந்திய அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி, 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இந்த உலகக்கோப்பையில் தனது சிறப்பான பேட்டிங்கால் பல சாதனைகளை அவர் முறியடித்தார். குறிப்பாக தனது 50வது சதத்தை விளாசி, ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
மேலும், விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதையும் விராட் கோலி வென்றார். ஆனால், உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு, விராட் கோலியை பொதுவெளியில் அதிகளவு பார்க்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விராட் பதிவிட்டிருந்தார்.
விபத்தில் சிக்கினாரா?
அதில் அவர் மூக்கில் பிளாஸ்திரி, கண் உள்பட முகத்தில் சிறு சிறு காயங்களுடன் காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி "விராட் கோலி விபத்தில் சிக்கி விட்டார்" என பொய்யான செய்தியும் பரவியது.
ஆனால் அந்த புகைப்படத்தில், வெள்ளை நிற டி-ஷர்ட்டில் இரு விரல்களை காண்பித்து அவரின் டிரேட்மார்க் சிரிப்புடனே விராட் காணப்பட்டார். மேலும், அந்த புகைப்படத்தின் கீழ் "நீங்கள் அந்த இன்னொரு நபரையும் பார்த்தாக வேண்டும்" (You should see the other guy) என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் அடுத்த ஸ்டோரியை பார்த்தபோதுதான், இது அவர் விளம்பரத் தூதராக இருக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பர யுக்தி என தெரியவந்தது.
Black Friday தள்ளுபடி விற்பனை சார்ந்து இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே விராட் கோலிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, அது வெறும் விளம்பர யுக்திதான் என்பது உறுதியானது. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.