World Cup: விராட்டின் விக்கெட்; மைதானத்தில் 1 லட்சம் பேர் அப்படி இருந்தார்கள்.. - பாட் கம்மின்ஸ்!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்த ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில், இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என போட்டிக்கு முன்னர் கூறியிருந்தார். அதேபோல் போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணியை துவம்சம் செய்து மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை அமைதியாகவே ஆஸ்திரேலிய அணி வைத்திருந்தது.
பாட் கம்மின்ஸ்
இந்நிலையில் உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நேர்காணல் ஒன்றில் பேசிய கம்மின்ஸ் "விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்.
மைதானத்தில் ரசிகர்களை கவனியுங்கள் என்றார் ஸ்டீவ் ஸ்மித். நாங்கள் அந்த தருணத்தில் மைதானத்தில் உள்ள ரசிகர்களைக் கவனித்தோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அடங்கிய மைதானம் மிகவும் அமைதியான நூலகம் போல மாறியது. ரசிகர்கள் மிகவும் அமைதியானார்கள். இந்த தருணத்தை நான் நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்திருப்பேன். அது மிகவும் சிறப்பான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.