அந்த வீரரின் இடத்தை நான் நிரப்புவேனா..? தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பதில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தியா - ஜிம்பாப்வே
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
இதற்கு இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
வாஷிங்டன் சுந்தர்
மேலும், ஆட்ட நாயகன் விருதும் அவர் வென்றார். முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான நீங்கள் ஜடேஜாவின் இடத்தை நிரப்புவீர்களா? என்று வாஷிங்டன் சுந்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் "நான் சிறப்பாக செயல்படும் இடங்களில் அசத்த வேண்டும். குறிப்பாக எனது தரப்பில் முடிந்ததை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னுடைய 100% பங்களிப்பை இந்தியாவுக்காக கொடுக்க வேண்டும். அதே சமயம் என்னுடைய திறமையில் நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இந்தியாவுக்காக விளையாடுவது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அதற்காக நான் ஆசீர்வாதம் செய்யப்பட்டிருக்கிறேன். எனவே, தொடர்ந்து என்னை நானே தயார்படுத்திக் கொண்டு முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியம். அதை செய்தால் மற்ற அனைத்தும் தாமாக பார்த்துக் கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.