இலங்கை அணி கேப்டனுக்கு விளையாட தடை; ICC எடுத்த அதிரடி முடிவு - என்ன நடந்தது?
இலங்கை டி20 அணி கேப்டன் வனிந்து ஹசரங்கா 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
வனிந்து ஹசரங்கா
இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 209 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான். இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் வீசிய ஃபுல் டாஸ் பந்து இடுப்பு உயரத்துக்கும் மேல் வந்தது.
ஆனால் அம்பயர் அதனை நோ பால் அறிவிக்கவில்லை. இந்த போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டி முடிந்தவுடன் பேசிய இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்கா, "அது நோ பால் என்பதை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் சர்வதேச போட்டிகளுக்கு அம்பயராக இருக்க தகுதியே இல்லை.
விளையாடத் தடை
அவர் வேறு ஏதாவது வேலை செய்தால் சிறப்பாக இருக்கும்" என்று அம்பயரை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதால் ஹசரங்காவிற்கு ஐசிசி விதிப்படி 3 குறைபாட்டுப் புள்ளிகள் (Demerit points) மற்றும் போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளில் ஒரு வீரர் 5 குறைபாட்டுப் புள்ளிகளைப் பெற்றால் அந்த வீரருக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டி அல்லது 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும்.
ஹசரங்கா கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே 2 முறை தவறாக நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்க முடியாது.