World Cup: ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்ற 'ஜடேஜா' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக ஏசிபி (Afghanistan Cricket Board ) இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அஜய் ஜடேஜாவை நியமித்துள்ளது.
இது தொடர்பாக Afghanistan Cricket Board வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அஜய் ஜடேஜா ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஜெர்ஸியை அணிந்தபடி இருக்கிறார்.
யார் இந்த அஜய் ஜடேஜா?
அஜய் ஜடேஜா 1992ம் ஆண்டு முதல், 2000ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 576 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 அரை சதங்கள் மற்றும் சிறந்த தனிநபர் ஸ்கோரான 96 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் 196 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் உட்பட மொத்தம் 5935 ரன்களை குவித்துள்ளார். நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு நாள் போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
52 வயதான அஜய் ஜடேஜா பல வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.