மீண்டும் வெடித்த வன்முறை; தனியா சாகப் போறோம் - மம்தா வேண்டுகோள்
மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
வக்பு சட்டம்
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில நாட்களாக வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
இந்த போராட்டத்தில் வன்முறையும் வெடித்துள்ளது. இதில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். குறிப்பாக முர்ஷிதாபாத், டயமண்ட் ஹார்பர், டெல்லி மற்றும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்திய மதசார்பற்ற முன்னணி சார்பில் வக்பு சட்டத்துக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னணியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நவுஷாத் சித்திக் உரையாற்றினார். ஆனால் இந்த கூட்டம் அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி அவர்களை போலீசார் வழியில் தடுத்துள்ளனர்.
வெடிக்கும் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றனர். தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு போலீசாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.
பின், பல மணி நேரமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலீசார் அங்கே வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுக்க வேண்டாம் எனவும் மதத்தை வைத்து தேவையில்லாத விளையாட்டுக்கள் விளையாடக்கூடாது. தர்மம் என்றால் பக்தி, பாசம், மனிதநேயம், அமைதி, நட்பு, கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை சக மனிதர்களை நேசிப்பது ஆகும்.
மனிதர்களை நேசிப்பது எந்த ஒரு மதத்தினுடைய உயரிய வெளிப்பாடாகும். நாம் தனியாக பிறந்தோம். தனியாக இறக்கப் போகிறோம். இதில் ஏன் நாம் சண்டை போட வேண்டும்? ஏன் வன்முறை, அமைதியின்மை எனப் பேசியுள்ளார்.