எதிர்க்கட்சிகளுக்கு அதுமட்டும்தான் முக்கியம்; நாடு முக்கியமல்ல - பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 44 திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
130 குடிநீர் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரு அரசு கல்லூரி உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை-31 இல் ரூ. 980 கோடிக்கு மேல் மதிப்புள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.
பின் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டிற்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி என்பதேயாகும். இந்த உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
அரசியல் விளையாட்டு
இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள், நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டமே கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காகவே, இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே அரசியல் விளையாட்டுகளை விளையாடும் இவர்களின் கொள்கை குடும்பத்துக்கே ஆதரவு குடும்பத்துக்கே வளர்ச்சி என்பதாகும். கடந்த காலங்களில் பூர்வாஞ்சலில் சுகாதார வசதிகள் இல்லை. ஆனால், இன்று காசி சுகாதார தலைநகராக மாறி வருகிறது.
இன்று இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டு முன்னேறி வருகிறது. நமது காசி இதற்கு சிறந்த முன்மாதிரியாக மாறி வருகிறது.
இந்தியாவின் ஆன்மா அதன் பன்முகத்தன்மையில் வாழ்கிறது, காசி அதன் மிக அழகான படம். 2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்ய எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.