வினேஷ் எடைக்குறைப்பு ரகசியம்; இறந்து விடுவாரோ என நினைத்தேன் - பயிற்சியாளார் தகவல்
எடைகுறைப்புப் பயிற்சிகளால் வினேஷ் இறந்துவிடுவாரோ என அஞ்சியதாக பயிற்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது.
இதில், மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட உடல் எடையை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, வினேஷ் போகத் ஓய்வை அறிவித்தார்.
அதனையடுத்து, சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் தனக்கு வெள்ளி பதக்கமாவது வழங்கப்பட வேண்டுமென வினேஷ் போகத் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் பயிற்சியாளர் லோவர் அகோல் இதுகுறித்து பேசுகையில்,
பயிற்சியாளர் தகவல்
“அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் அவரின் உடல் எடை 2.7 கிலோ கிராம் அதிகமாகியிருந்தது. இதனால் அவர் கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டார். அப்போதும் ஒன்றரை கிலோ எடை குறையவில்லை. அதன்பின்னர் 50 நிமிடங்கள் நீராவிக் குளியல் மேற்கொண்டார்.
ஆனால் அவர் உடலில் இருந்து வியர்வை வெளியேறவில்லை. அதனால் தொடர்ந்து அதிகாலை 5.30 மணிவரை கடுமையானப் பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். பயிற்சிக்கு இடையே 2 முதல் 3 நிமிடம் அவர் ஓய்வெடுப்பார். இந்த பயிற்சியின் போது அவர் சரிந்து விழுந்தே விட்டார்.
அவரை எழுப்பி நீராவி குளியல் செய்யவைத்தோம். நான் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை. ஆனால் இந்த பயிற்சிகளின் போது அவர் இறந்துவிடுவாரோ என்றே நாங்கள் அஞ்சினோம்.” எனத் தெரிவித்துள்ளார்.