வினேஷ் போகத் மேல் முறையீடு - தீர்ப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்!
வினேஷ் போகத் மேல் முறையீடு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
வினேஷ் போகத்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் முடிவடைகிறது. தற்போது வரை இந்தியா 3 வெண்கல பதக்கங்கள், 1 வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
இதில், மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் அனுமதிக்கப்பட்ட உடல் எடையை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, வினேஷ் போகத் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் தனக்கு வெள்ளி பதக்கமாவது வழங்கப்பட வேண்டுமென வினேஷ் போகத் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேல் முறையீடு
இந்த முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ஏற்றதையடுத்து நடத்திய விசாரணையில் வினேஷ் போகத் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் வாதாடினர். வழக்கின் தீர்ப்பு ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் அறிவிக்கப்படும் என்று சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில்,
இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து விளையாட்டு துறையை சார்ந்தவர்கள் கூறுகையில்,
ஒருவருக்காக விளையாட்டின் விதிகளை மாற்றினால் நாளை ஒவ்வொருவருக்காகவும் இதை மாற்ற வேண்டி வரும். எனவே வினேஷின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.