செப் 23-ல் பிரம்மாண்ட மாநாடு.. கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முதல் மாநாடு
2024 ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த நிலையில், விஜய்யின் கட்சியைப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதற்கிடையே, கட்சியின் முதல் மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்த விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி ,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது . இதற்காக நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.
ஆலோசனை
மாவட்ட வாரியாக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் விவரங்களைச் சேகரிப்பது, மாநாட்டுக்கு வருவோருக்கு உணவு ஏற்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக தொண்டர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கு அமைக்கப்பட்ட பொறுப்பாளர்கள், குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க நிர்வாகிகளை விஜய் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.