விஜயகாந்த் திரும்ப வருவார் - வதந்திகளை பரப்பாதீர்கள் - நாசர் !!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வருகின்றார். இதன் காரணமாக நேரடி அரசியல் இருந்து சற்று ஒதுங்கி இருந்து வரும் நிலையிலும், அண்மையில் தனது பிறந்தநாள் அன்று அவர் தொண்டர்களை சந்தித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை சீராக இல்லை
விஜயகாந்திற்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மியாட் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், விஜயகாந்தின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் காணப்பட்ட போதும், கடந்த 24 மணி நேரத்தில், அவருக்கு நுரையிரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என நம்புகிறோம் என்றும் அடுத்த 14 நாட்கள் அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் திரும்ப வருவார்
இந்நிலையில், தான் அரசியல் பிரமுகர்களும் - சினிமா துறை பிரபலங்களும் அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்று வருகின்றார்.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்த நிலையில், அவரின் உடல்நிலை குறித்தும் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாசர், விஜயகாந்த் நல்லாயிருக்கார் என்றும் அவரின் எல்லா புலன்களும் செயல்படுகிறது என்று கூறி அவரது உடல்நிலை குறித்த செய்திகள் எல்லாம் மிகைப்படுத்தியதுதான் என்றார்.
தலைமை மருத்துவரும் விஜயகாந்த் நன்றாக இருப்பதாக தெரிவித்ததாக கூறிய நாசர், தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். கேப்டன் திரும்ப வருவார் - எங்களுடன் பேசுவார் - எங்களுடன் தோன்றுவார் என்றும் நம்பிக்கையுடன் அவர் தெரிவித்து சென்றார்.