விஜய்காந்த் மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்காந்த் மறைவு
விஜயகாந்த் மறைவு தொடர்பாக மியாட் மருத்துவனை வெளியிட்ட அறிக்கையில், நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மக்கள், அரசியல் கட்சிதலைவர்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல்
தொடர்ந்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி.தினகரன் இவரது மறைவு குறித்து, திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
வானதி ஸ்ரீனிவாசன் தனது பதிவில், திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன். நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரது மறைவு தாங்க முடியாத மன வேதனையைத் தருகிறது. அவர்கள் மறைவால் வாடும் அவரது மனைவி தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா, மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.