அம்பேத்கர் பெயரை கேட்டால் சிலருக்கு ஒவ்வாமை - அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்த விஜய்!
அம்பேத்கர் பெயரை கேட்டால் சிலருக்கு ஒவ்வாமையாக கூட இருக்கலாம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர்
மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது.
இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’’ யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.
தலைவர் விஜய்
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.