Coaching Center-ல் மகளுடன் பேசிய மாணவன்..கத்தியால் குத்திய கொடூரம்- தந்தை வெறிச்செயல்!
பயிற்சி மையத்தில் மகளுடன் பேசிய மாணவனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்
குஜராத்தின் பாவ்நகரில் OAJ இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் என்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் கார்த்திக் என்ற மாணவர் சேர்ந்து படித்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரிடம் பேசி பழகி வந்துள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் தந்தை ஜெகதீஷ் ராசாட் மாணவியை எச்சரித்துள்ளார். பிறகுத் தனது மகளுடன் போனில் பேசிய விஷயத்தைப் பற்றிப் பேசப் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். அப்போது பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர் ஆலோசனைக்காக அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆசிரியர் ஒருவரின் முன்னிலையில் ஜெகதீஷ் ராசாட் அவரை அணுகி, தனது மகளிடம் பேசக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவன் பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் ஜெகதீஷ் ராசாட் பொறுமை இழந்துள்ளார்.
தாக்குதல்
அப்போது திடீரென அந்த இளைஞனைக் கத்தியால் தோள்பட்டை , கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்தினார்.இதில் காயம் அடைந்த மாணவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, ராசாத்தை கைது செய்தனர்.இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்பொழுது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.