சிவலிங்கத்தின் அருகில் இறைச்சி துண்டு..ஊரையே களேபரமாக்கிய சம்பவம்- கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் அருகில் இறைச்சி துண்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தப்பசபுத்ரா ஜிர்ரா ஹனுமான் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 11ம் தேதி காலையில் கோவிலில் உள்ள சிவன் கருவறையைப் பூசாரி திறந்து பார்த்தபோது இறைச்சி துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோவில் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தார்.
உடனே அங்கு வந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தை அறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜக கட்சியினர் கோவில் முன் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதன் பின்னணியில் இருப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தவே இவ்வாறு செய்து வருவதாகக் குற்றம்சாட்டினர்.
இறைச்சி துண்டு
இதனையடுத்து, சிவ லிங்கம் சிலை அருகே இறைச்சி துண்டு எப்படி வந்தது எனக் கண்டறிவதற்காக காவல்துறை சார்பில் 4 குழுக்கள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இது ஒரு பூனையின் வேலை எனத் தெரியவந்தது.
அந்த வீடியோவில், இறைச்சி துண்டை கவ்விக்கொண்டு கோவிலுக்கு உள்ளே பூனை சென்றது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.