88% வாக்குகளை அள்ளிய புதின் - 5வது முறை மீண்டும் அதிபராகிறார்!
அதிபர் தேர்தலில் புதின் 88% வாக்குகளைப் பெற்று வெற்றி விளிம்பில் உள்ளார்.
அதிபர் தேர்தல்
ரஷ்யாவில் அதிபர் ஆட்சி முறை தான் நடக்கிறது. கடந்த 1999 முதல் அங்கே அசைக்கவே முடியாத தலைவராக விளாடிமிர் புதின் இருக்கிறார்.
அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 15 கோடி. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடக்கும். அதன்படி, திய அதிபரை தேர்வு செய்ய அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில்,
புதின் அதிபர் தேர்தலில் வென்றதாக முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. அங்கு பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகள் புதினுக்கு வந்ததாக கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுதான்.
அதிபராகும் புதின்
ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரா இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999இல் பதவிக்கு வந்த புதின் 2008இல் அதிபர் பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார்.
அதன் பிறகு மீண்டும் 2012இல் அதிபரான அவர், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து அதிபராக இருக்கலாம் என்று விதியை மாற்றினார்.
மேலும், பதவிக் காலம் 4 ஆண்டுகளாக இருந்த நிலையில் அது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.