மருத்துவமனை சிகிச்சையில் துரை தயாநிதி - மீண்டும் நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்!
துரை தயாநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
துரை தயாநிதி
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
2014ஆம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்த இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேரில் சென்ற ஸ்டாலின்
அப்போது, அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அதன்பின், மார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து அண்ணன் அழகிரிக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பின் சென்னையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்ததையடுத்து வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
தற்போது, துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மீண்டும் 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.