நள்ளிரவில் துணைவேந்தர்களை வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர் - ஆளுநர் பகீர் புகார்
துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ரவி
கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்தி வருகிறார். 4வது ஆண்டாக, உதகை ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். 41 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 9 துணைவேந்தர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த 9 பேரும் மத்திய அரசு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, "துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உதகைக்கு வந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் மிரட்டல்
அதனால்தான் உதகைக்கு வந்தும் பலர் மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர். கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபோன்று ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடப்பது பிடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.