செந்தில் பாலாஜி ராஜினாமா? விரைவில் அறிவிப்பு
அமைச்சர் பதவி அல்லது ஜாமீன் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
செந்தில் பாலாஜி
கடந்த 2023ம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போதும் இலாகா இல்லாத அமைச்சராகவே நீண்ட நாட்கள் தொடர்ந்தார்.
ஆனால் அவர் அமைச்சர் பதவியில் இருப்பதைக் காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் கொடுக்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், கடந்த 2024 பிப்ரவரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2024 செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் உடனடியாக அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
செந்தில் பாலாஜியின் ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இப்போது அவரது அமைச்சர் பதவிக்கு எதிரான வழக்காக மாறியிருக்கிறது. விசாரணைக் கைதியாக இருப்பதால், அவருடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஜாமீன் வழங்குவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
விரைவில் ராஜினாமா?
மேலும் சாட்சிகளைக் கலைக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையும் அவருக்கு விதிக்கப்பட்டது. அவர் அமைச்சரானதை சுட்டிக்காட்டி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது.
அமைச்சர் பதவியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து வரும் திங்கட்கிழைமைக்குள் முடிவெடுக்க கூறியிருந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜாமீன் ரத்தாவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், ராஜினாமா முடிவுக்கு செந்தில் பாலாஜி வந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதே நேரம் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொல்வது பற்றி விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. ஒரு வழக்கு விசாரணை நிலையில் இருக்கும் போதே குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் பதவியில் நீடிக்க கூடாது என்பது அரசியலமைப்பின் படி அவருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறது என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.
ஒரு வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, Bail is a rule; Jail is an option என்ற விதியை இந்திய நீதித்துறை கடைபிடிக்கிறது. ஆனால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் தகுதிநீக்கம் அடையாத வரை பதவியில் இருக்கலாம் என்ற நிலையில்
செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யாவிடில் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனை குறித்து கேள்வி எழுந்திருக்கிறது. செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவு எடுத்தாலும் சட்டரீதியான வாய்ப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் தொடர்ந்து நடக்கிறது என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜாக்பாட் உங்க நட்சத்திரம்? Manithan
