துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் ரவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.
துணைவேந்தர்கள் மாநாடு
கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்தி வருகிறார். 4வது ஆண்டாக, உதகை ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த 2 நாள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். இதற்காக தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது?
இதற்கிடையில் தமிழக அரசுக்கு போட்டியாக மாநாட்டை நடத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து உதகையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டை தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். அதேபோல் சில தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் மாநாட்டை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.