வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு - சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்!
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார்.
த.வெள்ளையன் மறைவு
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவரான வெள்ளையன்(76), தமிழக வியாபாரிகளை ஒருங்கிணைத்து, ஒரு அமைப்பாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர்.
வணிகர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். பல அரசியல் கட்சி தலைவர்களுடன் இணக்கமான நட்பும் கொண்டிருந்தவர். இந்நிலையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெள்ளையன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைவர்கள் இரங்கல்
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் வணிகர் சங்கப் பேரவை கூட்டமைப்புத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் இன்று(செப்.11) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.