இனி வெறும் 95 நிமிஷம் தான்..சென்னை - திருப்பதி; வந்தே பாரத் வந்தாச்சு, பக்தர்கள் ஹேப்பி!
சென்னையில் இருந்து பயணிகள் இப்போது 95 நிமிடங்களில் திருப்பதியை அடையலாம்.
சென்னை - திருப்பதி
ஆந்திரா, திருப்பதிக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலிருந்து அதிவேக ரயிலான வந்தே பாரத் திருப்பதிக்கு இணைப்பை வழங்கும் வகையில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், சென்னைக்கும் திருப்பதியில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள ரேணிகுண்டாவுக்கும் இடையிலான 136.6 கி.மீ தூரத்தை ஒரு மணி நேரம் 35 நிமிடங்களில் கடக்கிறது.
95 நிமிடம்
சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில், சென்னை மற்றும் திருப்பதி இடையேயான தொடர்பை மேம்படுத்த ரேணிகுண்டா மற்றும் நெல்லூர் வழியாகச் செல்லும் சுற்றுப் பாதையில் (514 கி.மீ.) செல்லும்.
இந்த ரயில் இறுதிப் பயணத்தை ஆறு மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து செல்லும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாரத்தில் செவ்வாய்க்கிழமைகள் தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.
ரேணிகுண்டா (காலை 7.10), நெல்லூர் (காலை 8.40), ஓங்கோல் (காலை 10.10), தெனாலி (காலை 11.22) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.
தனியார் அல்லது அரசுப் பேருந்துகளில் சாலைப் பயணம் சராசரியாக மூன்று மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.