அதற்கு தைரியம் இல்லாத திமுக; பாஜகவை விமர்சிக்க உரிமை இல்லை - வானதி சீனிவாசன்!
தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சி திமுக தான் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
வானதி சீனிவாசன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கோவையில் நேற்று நடைபெற்ற (15-06-2024) திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து 'Close' செய்துவிட்டார்.
பா.ஜ.க.வால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியிருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைப் புரட்சியாளர் அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம்.240 என்பது, மோடியின் வெற்றி இல்லை. மோடியின் தோல்வி. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவில்தான் மோடி பிரதமராகியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் வென்ற 40 பேரையும் கேண்டீனில் வடை சாப்பிடச் செல்கிறீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்" என கூறியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமாக அதாவது 293 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகியிருக்கிறார். 62 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட சாதனை இது.
'இண்டி' கூட்டணி ஒட்டுமொத்தமாக பெற்ற இடங்களைவிட, பாஜக தனித்து பெற்ற இடங்கள் அதிகம். கர்நாடகத்தில் 17, தெலங்கானாவில் 8, கேரளத்தில் 1, ஆந்திரத்தில் 3 என தென் மாநிலங்களில் 29 இடங்களில் பாஜக தனியாக வென்றுள்ளது. தமிழ்நாட்டில் 11.24 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவிவரும், அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் பாஜக தோற்று விட்டது போலவும், 'இண்டி' கூட்டணி ஆட்சி அமைத்து விட்டது போலவும் கொஞ்சமும் கூச்சமின்றி பேசி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று கோவை பொதுக்கூட்டத்தில் சிலர் பேசியிருக்கின்றனர். அந்த கோவையில் போட்டியிட்டு தான் நான் எம்எல்ஏவாக இருக்கிறேன். ஆனால், கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு பத்மநாபபுரம் தொகுதியில் வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அன்றே தமிழகத்தில் பாஜக கால் பதித்து விட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் திமுக அதிமுக இல்லாமல் பாஜக கன்னியாகுமரி தொகுதியில் வென்றது.
தைரியம் இல்லாத திமுக
திமுகவுக்கு எதிரான கட்சிகள், கூட்டணி அமைக்காமல் பிரிந்து போட்டியிட்டதால்தான், திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வென்றது. இது முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் தெரியும்.
1957-ல் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் திமுக, ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. பலமான கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட தேர்தல்களில் திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. ஆனால், திமுக சொந்தக் காலில் நின்று வெற்றி பெற்றது போல கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத ஒரே கட்சி திமுக மட்டுமே. ஒரு தேர்தலிலாவது தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன் பிறகு பாஜகவை ஸ்டாலின் விமர்சிக்க வேண்டும்.
"திமுக கூட்டணி எம்பிக்கள் பாஜகவின் ஆணவத்தை சுடுவார்கள்" என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள் யாராவது இந்தியில் பேசினால் எதிர்த்து கூச்சலிட்டது, இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் ஏன் அதிக நிதி ஒதுக்கிறீர்கள் என்று கேட்டதைத் தவிர திமுக கூட்டணி எம்பிகள் எதையும் செய்யவில்லை. அடுத்த 5 ஆண்டுகளும் இதைதான் செய்யப் போகிறார்கள். 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்தது. ஆனாலும், கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், கூட்டணி கட்சிகளின் தயவால் வெற்றி பெற்ற பிறகும், கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்காமல், தனித்து ஆட்சி அமைக்கும் கட்சி தான் திமுக.
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், பாமக ஆதரவுடன்தான் ஆட்சி அமைத்தது. ஆனால், காங்கிரஸ், பாமகவை அமைச்சரவையில் சேர்க்கவில்லை. மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக ஆட்சி அதிகாரத்தை ஆணவத்துடன் பிடுங்கிக் கொண்ட திமுக, பாஜகவை நோக்கி ஆணவத்துடன் செயல்படுவதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கூட்டணி, கூட்டாட்சி, சமூக நீதி, சமத்துவம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் முதலில் அதை செயல்படுத்த வேண்டும்.
கூட்டணி இல்லாமல் வென்றால் தனித்து ஆட்சி அமைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. கூட்டணி இல்லாமல் வெல்லவே முடியாத திமுக, தனித்து ஆட்சி அமைப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மக்கள் தீர்ப்பதற்கு மதிப்பளிப்பதாக இருந்தால், இனியாவது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் திமுக இடம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.