ஒருபக்கம் வள்ளிக்கும்மி; மறுபக்கம் Speed Date - கொங்கு மண்டலத்தில் நடப்பதுதான் என்ன?
Speed Date என்ற கலாச்சாரம் வைரலாகி வருகிறது.
வள்ளிக்கும்மி
ஈரோட்டில் அண்மையில் நடந்த வள்ளி கும்மி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அருகே உள்ள கோவையில் ஸ்பீடு டேட் நடந்துள்ளது.
வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் பொருளாளர் கே.கே.சி.பாலு, தங்கள் சாதி ஆணையே திருமணம் செய்து கொள்வோம் என்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் உறுதிமொழி வாங்கிய நிகழ்வு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
Speed Date
இந்நிலையில் ’ஸ்பீடு டேட்’ என்ற ஒன்று டிரெண்டாகி வருகிறது. அறிமுகம் இல்லாத நபர்கள் ஒன்று கூடி அங்கு ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவது, கூட்டமாக சிலவற்றை விவாதிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, உணவு மற்றும் டீ அருந்துவது போன்றவற்றை இதன் செயல்பாடுகளாக கூறுகின்றனர்.
தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கோவையிலும் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் பேசுகையில், ஸ்பீடு டேட் காதலர்களுக்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும் கருதக்கூடாது.
இங்கு பலரும் நட்பாகின்றனர். வாழ்வில் அடுத்த கட்ட நகர்வைப் பெறுகின்றனர், தங்களுக்குள் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் வள்ளிக்கும்மி பயிற்சி, பெண்களுக்கு அறிவுரை, மறுபக்கம் டேட்டிங் போன்ற நிகழ்ச்சிகள் பெருகி வருவது இளைஞர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றாலும் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.