குஷ்பூ-வை பார்த்த ரஜினி; என்கிட்ட வாய்விட்டு கேட்ட விஷயம் - போட்டுடைத்த வைரமுத்து!
"கொண்டையில் தாழம்பூ" என்ற பாடலை எழுதியது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து பேசியுள்ளார்.
அண்ணாமலை
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த்-குஷ்பு நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை. தேவா இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற "கொண்டையில் தாழம்பூ" என்ற பாடலை எழுதியது குறித்து நேர்காணல் ஒன்றில் பாடலாசிரியர் வைரமுத்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "அந்த பாடலில் குஷ்பூ என்ற பெயர் வருவதை நான் எழுதியதை இயக்குநர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற குழப்பத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரஜினி அங்கு வந்தார்.
ராஜா நீ ரஜினி
அவர் என்னவென்று கேட்டதும், நான் பாடல் வரிகளை அவரிடம் கொடுத்தேன். அப்போது குஷ்பூ என்ற பெயரை பார்த்ததும் இது பாட்டில் வருமா? என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னதும் 'அப்போ ரஜினி என்ற பெயரும் வருமா? என்று கேட்டுவிட்டார்.
நாங்கள் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அவர் கேட்டதால் தான் பிறகு "வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி" என்ற வரிகளை சேர்த்தேன். நான் எத்தனையோ பாடல்களை ரஜினிக்கு எழுதி இருக்கிறேன். ஆனால், முதல் முதலாக ரஜினி என்னிடம் வாய்விட்டு கேட்டது இந்த ஒன்றுதான். அதனால் அவருக்கு ரஜினி என்று எழுதிக் கொடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.