கெஜ்ரிவால் கைது; காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் எல்லாம் தெரியும் - எகிறும் அமெரிக்கா!
கெஜ்ரிவால் கைது குறித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தலையீடு
டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இந்த விவகாரத்தில் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன. "அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது.
சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்" என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்தியாவுக்கு தலைவலி
இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செயல் துணை தலைவர் குளோரியா பெர்பெனாவிடம் இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில், மெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்,
"அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். வங்கி கணக்குகள் முடக்கம் என்கிற காங்கிரஸ் குற்றச்சாட்டையும் நாங்கள் அறிவோம். இந்த பிரச்னைக்கு நியாயமான, வெளிப்படையான சட்டச் செயல்முறைகள் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் வெளிப்படையாக பேசியதை யாரும் எதிர்க்க வேண்டும் என நினைக்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.